November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“சோமாலியாவைப் போன்று வடக்கு – கிழக்கை மாற்றும் முனைப்பிலேயே அரசு செயற்படுகின்றது”

மக்களின் எதிர்ப்புக்களையும் மீறி திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெறவுள்ள இல்மனைட் அகழ்வுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகவா அப்பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

யுத்தத்தினால் அழிவடைந்த வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய அரசு திட்டமிட்டுப் புறக்கணிக்கின்றது. சோமாலியா நாடு போன்றதொரு நிலைமையை வடக்கு, கிழக்கில் ஏற்படுத்தும் முனைப்புக்களிலேயே அரசு ஈடுபட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களை மையமாக வைத்து இல்மனைட் அகழ்வு என்ற அடிப்படையில் சூழலுக்கு, மனித குலத்துக்கு எதிரான விடயங்களை அரசு கையாளுகின்றது.

இதுபோன்று திருக்கோவில் பிரதேசத்தை மையமாக வைத்து இல்மனைட் அகழ்வு செய்வதற்கான முனைப்புக்கள் இடம்பெறுகின்றன. இதற்கு எமது மக்கள் நீண்டகாலமாக எதிர்ப்புக்களைத் தெரிவித்து வந்துள்ளனர்.

பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வு செய்வதில்லை என்ற ஏகோபித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் இல்மனைட் அகழ்வுக்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

அதுமட்டுமன்றி, திருக்கோவில் பிரதேசத்தில் யுத்தம் இல்லாத சூழலில் ஏன் புதிய இராணுவ முகாம்கள்? இல்மனைட் அகழ்வுக்கு பாதுகாப்பு கொடுக்கவா இவை அமைக்கப்படுகின்றன?  31000 மக்கள் வாழ்கின்ற திருக்கோவில் பிரதேசத்தில் 40 ஆம் கட்டைப்பகுதியில் ஒரு இராணுவ முகாம், கஞ்சிகுடியாறில் ஒரு இராணுவ முகாம், தம்புலுவிலில் ஒரு பாதுகாப்பது அரண், சாகாமத்தில் ஒரு இராணுவ முகாம், என அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

எமது மக்களுக்கு அபிவிருத்திகளைச் செய்ய வேண்டிய இந்த காலகட்டத்தில் இவ்வாறான இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதன் நோக்கமென்ன? நாம் இந்த நாட்டில் அழிவை சந்தித்து வாழ முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் இவ்வாறான இராணுவ முகாம்கள் எமக்கு தேவையா? பாடசாலைகளில் கூட இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து பல கைத்தொழிற்சாலைகள், கைத்தொழில் பேட்டைகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆசியக்கண்டத்திலேயே பெயர்போன சவளக்கடை அரிசிஆலை  இருந்த இடத்தையே இன்று காணவில்லை.

நாம் எத்தனையோ கோரிக்கைகளை விடுத்தபோதும், அந்தப் பகுதியை அபிவிருத்தி செய்யும் நோக்கம் எவருக்குமே இல்லை. 68 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்ட கட்டிடங்கள் இருந்தன. அங்கு அம்பாறை மாவட்ட விவசாயிகள் மட்டுமன்றி, காலி, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் உள்ளவர்கள் வந்து அரிசிகளை கொள்வனவு செய்தனர்.

அதுமட்டுமன்றி, கடலை அண்டிய கப்பற்போக்குவரத்தும் இருந்துள்ளது. அவ்வாறான பிரபலமான அரிசி ஆலை அழிக்கப்பட்டுள்ள போதும் இன்னும் அது புனரமைக்கப்படவில்லை. இந்த நடைமுறை தொடர்ச்சியாக இருக்குமானால் தன்னிறைவுகொண்ட ஒரு நாடாக இலங்கை மாற முடியாது எனவும் கலையரசன் எம்.பி. தெரிவித்தார்.