November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேறியது

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது.

பேரவையின் 46 ஆவது அமர்வில் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் இலங்கை மீது முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், தீர்மானத்துக்கு எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன.

இந்தியா, ஜப்பான் உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்தத் தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல என்றும் இலங்கையில் அனைவரின் மனித உரிமைகளை உறுதி செய்வதற்கானது என்றும் பிரிட்டனின் பிரதிநிதி ஐநாவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கை மீதான தீர்மானம் அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கும் சவாலாக அமைந்துள்ளதாக இலங்கையின் பிரதிநிதி தெரிவித்தார்; குறித்த தீர்மானம் ஐநாவின் அடிப்படை உடன்படிக்கைகளுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை நிலைமைகளை ஐநா அரசியல் மயப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள சீனா,  இலங்கை மீதான தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதிக்கும்- இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிய இந்தியா, வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இலங்கை நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்       மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்து இந்தத் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே, இலங்கை மீதான ஐநா தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்து, பிலிப்பைன்ஸ் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளது.

“இந்தத் தீர்மானம் விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் அவர்களின் நிதி ஆதரவாளர்களையும் கண்டிக்கத் தவறியுள்ளது” என்றார் ஐநாவுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி.

சான்றுகளைத் திரட்டும் அதிகாரம்

இலங்கையின் போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை திரட்டிப்   பாதுகாப்பதற்கு ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் மிஷேல் பச்சலெட்டுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதாரங்களைத் திரட்டி எதிர்காலத்தில் வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான பணியாளர்களையும்  2.8 மில்லியன் டொலர் நிதியையும் புதிய தீர்மானம் மிஷேல் பச்சலெட்டுக்கு வழங்குகின்றது.