July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அதிக கடன்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 2 ஆம் இடம்’

(Photo : Facebook/Kabir_Hashim)

உலகின் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அதிக கடன்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும், கடன் நெடுக்கடிகளை அரசாங்கம் மறைத்து மக்களை ஏமாற்றுவதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம் சாட் டியுள்ளார்.

பங்களாதேஷ் நாட்டிடம் கடன் கேட்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளமை மிக மோசமான நிலைமையாகும் எனவும் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டளவில் இந்த நாட்டின் மொத்தக்கடன் 15 ட்ரில்லியனாக இருந்தது. இவற்றில் தேசிய கடனாக 56 வீதமும் சர்வதேச கடன் 44 வீதமாகவும் காணப்பட்டது. தற்போது தேசிய கடன் வீதமானது நூறுக்கு 110 வீதம் என்ற ரீதியில் காணப்படுகின்றது.

உலகில் நடுத்தர அபிவிருத்தி நாடுகளில் அதிக கடன்களை கொண்ட நாடுகளில் முதலிடத்தில் லெபனானும் இரண்டாவது இடத்தில் இலங்கையும் உள்ளது. இந்நிலையில் கடன் நெருக்கடி இல்லை எனவும், இலகுவாக கடன்களை செலுத்துவோம் எனவும் அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வருகின்றது.

அதேபோல், 32 பில்லியன் டொலர் கைவசமாக இருப்பதாக அரசாங்கம் கூறுவது உண்மையென்றால் சீனாவிடம் 1.5 பில்லியன் டொலர் கடன் கேட்டமையும், தற்போது பங்களாதேஷிடம் 1 பில்லியன் டொலர் கடன் பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்துகின்றமையும் ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.

பிரதமரின் பங்களாதேஷ் விஜயம் ஜெனிவாவை அடிப்படையாகக் கொண்டதாக நினைத்தோம்.ஆனால் கடன்களை கேட்கவே பிரதமர் சென்றுள்ளார். பங்களாதேஷ் நாட்டிடம் கடன் கேட்கும் நிலைக்கு வீழ்ச்சி கண்டுவிட்டோமா. இது நாட்டின் மீதான நம்பிக்கையை இழக்கச்செய்யும் செயலாகும்.

கடந்த ஆண்டில் 690 பில்லியன் ரூபா புதிதாக அரசாங்கம் அச்சடித்தது.இதுவே ரூபாவிற்கான பெறுமதி வீழ்ச்சி காண பிரதான காரணமாகும். உலக நாடுகளில் அமெரிக்க டொலருக்கான பெறுமதி வீழ்ச்சி காணும் வேளையில் இலங்கையில் மாத்திரம் டொலருக்கான பெறுமது அதிகரிக்கின்றது. இதுவே அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவ பலவீனத்தன்மையை வெளிப்படுத்துகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.