முதலாவது டோஸாக அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு 2வது டோஸாக சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்துவதற்கு அரசாங்கத்தினால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் ஒழுங்குப்பிரச்சினை கேள்வியொன்றை எழுப்பிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களுக்கும் தேவையான 440 இலட்சம் “அஸ்ட்ராஜெனெகா” தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல, தற்போது வரையில் ஒரு தடுப்பூசி மட்டுமே பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளததாக சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.
எனவே, ஒரு நபருக்கு இரண்டு தடுப்பூசிகள் வழங்க வேண்டும், ஆனால் அரசாங்கம் அதனை பெற்றுக்கொடுக்க முடியாத காரணத்தினால் அங்கீகாரம் இல்லாத “சினோபார்ம்” தடுப்பூசியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிப்பாக, சினோபார்ம் தடுப்பூசியை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் இலங்கை மக்கள் மீது பதிவு செய்யப்படாத தடுப்பூசியை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால், அரசாங்கம் தனது மக்களுக்கு சிறந்ததைச் செய்யும் எனவும், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.