July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீனி இறக்குமதி வரி குறைப்பினால் 15.9 பில்லியன் ரூபா நட்டம்’; அரசாங்கம் ஒப்புக்கொண்டது

சீனி வரி குறைப்பினாலும் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி குறைப்பினாலும் அரசாங்கத்திற்கு 21.1 பில்லியன் ரூபாவும், பெற்றோல், டீசல், வற்வரி குறைப்பு மற்றும் வாகன இறக்குமதி நிறுத்தம் காரணமாக மொத்தமாக 235 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

வரி குறைப்பினால் இப்போது மக்களுக்கு சலுகைகள் கிடைக்காது போனாலும் விரைவில் மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கான வரி குறைப்பின் மூலமாக அரசாங்கத்துக்கு தேவையான சில வியாபாரிகளுக்கே நன்மை கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதான எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றன.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சின் விசேட அறிவிப்பொன்றை நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் முன்வைத்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘சீனிக்கான வரி குறைக்கப்பட்டமையினால் 15.9 பில்லியன் ரூபாவை வசூலிக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் இது ஊழல் அல்ல. அரசாங்கம் வரிகளை குறைத்தால் இவ்வாறான சலுகைகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

வரிகளை அதிகரித்தால் அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கும் என கூறி மக்களின் மூலம் இவற்றை அறவிட முடியாது. பெரிய வெங்காயத்திற்கான வரி குறைப்பினால் 5.1 பில்லியன் ரூபா இல்லாது போனது.பருப்பு வரி குறைப்பால் 400 மில்லியன், டின் மீன் வரி குறைப்பால் 172 மில்லியன் இல்லாது போனதும் உண்மையே.

இவற்றினால் ஒட்டுமொத்தமாக 21.1 பில்லியன் ரூபாவை இழக்க நேர்ந்தது. இது மக்களுக்கான சலுகைகளை கொடுக்கவே இந்த வரி குறைப்பு கையாளப்பட்டது.

டீசல் வரி குறைக்கப்பட்டதால் 6.5 பில்லியன் இழப்பும், பெற்றோல் வரி குறைப்பால் 11.6 பில்லியனும், வற்வரி குறைப்பால் 34 பில்லியன் ரூபாயும், வாகன இறக்குமதி நிறுத்தத்தால் 20 பில்லியன் மற்றும் ஏனைய சில தீர்மானங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 235 பில்லியன் வருமானம் எமது கையை விட்டு சென்றுள்ளது.

இவற்றை சரிசெய்ய நாட்டின் வட்டி வீதத்தை குறைப்பு செய்தோம்.இதனால் கடன் தொகை குறைந்துள்ளது. இவ்வாறான காரணங்களினால் 283 பில்லியன் ரூபா மேலதிகமாக எம்மால் சேமிக்க முடிந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.