தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த 26ஆம் திகதி திலீபனுக்கு நினைவேந்தல் செய்ய முற்பட்டார்கள் என குற்றஞ்சாட்டி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா. அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டு. மாநகர சபை மேயர் டி. சரவணபவன், நா.சங்கரப்பிள்ளை (நகுலேஸ்) ஆகியோருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, ‘இது தவறான செயல்’ என தெரிவித்து அவர் அந்த வழக்கை தள்ளுபடி செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
இதன்போது, அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் அத்தனை பேரும் விடுவிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன் மேலும் கூறுகையில்,
“இப்படியான பொலிஸ் நடவடிக்கை முற்று முழுதாக தவறானது என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினோம். எந்தவித குற்றமும் செய்ததாக அந்த அறிக்கையில் சொல்லப்படவில்லை. அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட விடயங்கள் பொய்யானவை.
திலீபன் யுத்தத்தில் மரணித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது. திலீபன் உண்ணாவிரதம் இருந்து 12 நாட்களில் மரணித்தவர். அவருடைய நினைவு நாளை நாங்கள் வருடா வருடம் நினைவு கூர்ந்துவருகின்றோம்.
இந்த 6 பேரும் என்ன குற்றம் செய்தார்கள் என்று சொல்லப்படவில்லை.
ஆகவே, நீதிமன்றத்தில் பொய்யான அறிக்கை சமர்ப்பித்து முக்கியமானவர்களை நீதிமன்றத்துக்கு கொண்டு வந்து நிறுத்திய செயலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்தோம்.
நீதவானும் அதனை ஏற்றுக் கொண்டு, திறந்த நீதிமன்றத்தில் “ஆம் இது தவறான செயல்” என்பதை கூறியுள்ளார்.
பொலிசார் இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வார்கள் என நம்புகின்றோம். ஆனால் பொலிசார் முறை தவறி நடந்த காரணத்தால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்றார்.