
இலங்கை மீது ஐநா தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு ஆதரவளித்துள்ள நாடுகளில் ஒரு ஆசிய நாடேனும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது தீர்மானமொன்றை முன்வைப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ள 40 நாடுகளும் உலகத்தின் ஒரு பகுதியைச் சேர்ந்தவை என்றும் அவை முழு உலகையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஐநா தீர்மானம் நீதியை நிலைநாட்டுவதற்காக அன்றி, வெளிநாட்டு சக்திகளின் அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐநா தீர்மானங்கள் வெளிநாடுகளின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான படிமுறை ரீதியான முயற்சியே என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்த நாடுகள் இதற்கு முன்னர் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தைப் பாதுகாத்ததாகவும், தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.