இலங்கையில் பிசிஆர் சோதனைகளுக்கென தினசரி குறைந்தபட்சம் 80 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகின்றது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக நாடுகள் பல முடக்கப்பட்ட போதும், இலங்கையில் அந்த தொற்று வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் அரசாங்கம், திட்டமிடலுடன் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்று நிலைமையின் போது, சிகிச்சையளிக்கவென ஒரே ஒரு தொற்றுநோய் மருத்துவமனை மட்டுமே இருந்த நிலையில், சுகாதாரத் துறையை பலப்படுத்தி முறையான திட்டத்தை செயற்படுத்தி தொற்று நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.