January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம்; ராஜித – சத்துர குற்றத்தடுப்புப் பிரிவில் வாக்குமூலம்

ஊடகவியலாளர் சுஜீவ கமகே கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்த போலியான முறைப்பாடு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகனான சத்துர சேனாரத்ன ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

குழுவொன்றினால் கறுப்பு வானில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறி ஊடகவியலாளர் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ள சுஜீவ கமகே எனப்படும் 62 வயதான நபர் ஒருவர், கடந்த 10 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு வைத்தியசாலையிலுள்ள பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும், தாம் கடத்தப்படவில்லை எனவும், அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவையும், அவரது புதல்வரான சத்துர சேனாரத்னவையும் சந்தித்ததாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இதனிடையே, ஊடகவியலாளர் சுஜீவ கமகே தான் கடத்தப்பட்டதாக பொய் நாடகம் ஒன்றை அரங்கேற்றியதாக கூறி பொலிஸார் அவரை அண்மையில் கைது செய்திருந்தனர். எனினும், தன்னிடம் பொலிஸார் போலியாக வாக்குமூலம் பெற்றதாக நீதிமன்றத்தில் கமகே தெரிவித்ததால்,அவரை நீதிமன்றம் பிணையில் விடுவித்திருந்தது.

இந்த நிலையில்,குறித்த ஊடகவியலாளரைக் கடத்திச் சென்று தாக்கப்பட்டதாக வழங்கப்பட்ட போலியான முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகிய இருவரும் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகினர்.

எவ்வாறாயினும், குறித்த கடத்தல் சம்பவம் சோடித்த சம்பவம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.