November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேய்ந்த டயர்களுடன் ஓடும் வாகனங்களைக் கண்டுபிடிக்க விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு

தேய்ந்துபோன டயர்களுடன் ஓடும் வாகனங்களைக் கண்டறிவதற்கு நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

வீதி விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதே இதன் நோக்கம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேநேரம், கடந்த 24 மணித்தியாலங்களில் 8 பேர் வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களில் 30 முதல் 40 வரையானோர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், பாதுகாப்பின்றி வாகனம் செலுத்துதல் மற்றும் வாகனங்களில் காணப்படுகின்ற கோளாறுகளே விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தேய்ந்துபோன டயர்களுடன் வாகனங்களை செலுத்துதல் மற்றும் கோளாறுகளுடன் வாகனங்களை செலுத்துதல் தொடர்பில் ஆராய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேய்ந்த நிலையில் உள்ள டயர்களுடன் வாகனத்தை செலுத்துவோருக்கு 3500 ரூபா அபராதம் விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, வீதி போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு பொருத்தமற்ற, மோசமான நிலையில் உள்ள வாகனங்களை செலுத்துவோருக்கு 25000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.