May 29, 2025 15:01:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“அரவிந்தகுமாரை நீக்கியதன் மூலம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் விரிசல் முடிவுக்கு வந்தது”: இராதாகிருஷ்ணன்

மலையக மக்கள் முன்னணியில் இருந்து அருணாச்சலம் அரவிந்தகுமார் நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று ஹட்டனிலுள்ள தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது எனவும் அரவிந்தகுமார் எம்.பியை நீக்கியதன் மூலம் தமிழ் முற்போக்கு கூட்டணியில் ஏற்பட்டிருந்த சிறு விரிசலும் முடிவுக்கு வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமாரை கட்சியை விட்டு நீக்குவதற்கும், அவர் வகிக்கும் பதவிகளை பறிப்பதற்கும் மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்பு கோருமாறு வழங்கிய சந்தர்ப்பத்தையும் அரவிந்தகுமார் ஏற்கவில்லை என்றும் இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரவிந்தகுமாருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையில் சிறு தாமதம் ஏற்பட்டதால், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியன பங்காளிக் கட்சிகள் கேள்வி எழுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.