November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எம்சிசி உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது”: சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

அமெரிக்காவுடனான ‘மிலேனியம் செலேஞ் கோப்ரேஷன்’ (எம்சிசி)  உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

எம்சிசி உடன்படிக்கையில் கையெழுத்திடுவதை தடுக்க வேண்டும் எனக் கோரி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உயர்நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பாக ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பர்சானா ஜமீல், எம்சிசி உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடாது என்று கூறியுள்ளார்.

இதேவேளை, படைகளின் அந்தஸ்து தொடர்பான அமெரிக்காவின் சோபா உடன்படிக்கை குறித்து இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் சட்டமா அதிபர் சார்பாக ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகள் தொடர்பான ‘அக்சா’   உடன்படிக்கை  கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்ந்தும் செயற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக நீதியரசர்கள் குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.