October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா தீர்மானத்துக்குப் பதிலளிக்க மூன்று நிமிடங்களே வழங்கப்பட்டுள்ளதால் இலங்கை அதிருப்தி

இலங்கை மீதான தீர்மானத்துக்குப் பதிலளிப்பதற்காக மூன்று நிமிடங்களே வழங்கப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பான தமது அதிருப்தியை ஐநா மனித உரிமைகள் பேரவைக்குத் அறிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐநா பேரவையில் இலங்கை மீதான விவாதம் நடைபெறவுள்ள நிலையில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பான விவாதத்துக்கு நாம் தயாராக உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்றும், ஆதாரமற்றவை என்றும் அதிகமான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீதான முதலாவது வரைவில் குறிப்பிடப்பட்டிருந்த பல விடயங்களும், இறுதியாக முன்வைக்கப்பட்ட வரைவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிட்டனின் தலைமையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தாலும், தகவல்களின் ஆதாரமற்ற தன்மை காரணமாக பிரிட்டனுக்குள்ளேயே இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு மேலெழுந்துள்ளதாகவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.