ஜெனிவா தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது தமக்கு ஆதரவாக வாக்குகளை திரட்டுவதற்காக இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுடன் இராஜதந்திர ரீதியிலான கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.
சீனாவின் உதவியுடன் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள், பாகிஸ்தானின் உதவியுடன் இஸ்லாமிய நாடுகள், கியூபாவின் உதவியுடன் தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் குறிப்பிட்ட நாடுகளின் அரச தலைவர்களுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார செயலாளர் ஆகியோர் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து கடந்த தினங்களில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ள நாடுகளில் 10 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் சில நாடுகள் வாக்களிப்பின் போது நடுநிலை வகிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.