ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இறுதி வரைவு இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன் மீதான விவாதம் இன்றைய தினம் நடைபெறவுள்ளதுடன், அதனை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
பிரிட்டன், கனடா, ஜெர்மனி, வடக்கு மசிடொனியா, மொண்டினீக்ரோ மற்றும் மாலவி ஆகிய நாடுகளினால் இலங்கை தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்றைய தினத்தில் மேலும் 9 நாடுகள் தொடர்பான தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால், அதற்கு அதிகளவான நேரம் தேவைப்பட்டால் இலங்கை தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
47 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவுள்ளதுடன், இதில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் தெற்காசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்று கூறப்படுகின்றது.
மேலும் பல நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளவதற்காக இலங்கை அரசாங்கம் இறுதி நேரத்திலும் இராஜதந்திர கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.