‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஊடகங்கள் தொடர்பாக தெரிவித்திருந்த கருத்து ஊடகங்களை அச்சுறுத்தும் நோக்கமாகவே உள்ளது’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
‘இளைஞர்களின் அரசியல் எதிர்காலம்’ என்னும் தலைப்பில் யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை வேந்தன் கலை கல்லுாரி மண்டபத்தில் ‘இளைஞர்கள் கட்சியை வழிநடத்த வேண்டும்’ எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
“இலங்கையின் ஊடகத்துறை பற்றி ஒரு பாரிய எச்சரிக்கையை,அச்சுறுத்தலை ஜனாதிபதி பகிரங்கமாக விடுத்துள்ளார்.
‘நான் ஆட்சிக்கு வந்த பிறகு ஊடகங்கள் மீது எந்தவொரு அடக்குமுறையையும் கையாளவில்லை. ஆனால்,ஊடகங்களை எனக்கு கையாளத் தெரியும்’ என்ற தோரணையில் ஜனாதிபதி சொல்லியிருக்கிறார்.இது ஊடகங்களைப் அச்சுறுத்தும் ஒரு செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்;சிலர் கடத்தப்பட்டார்கள்.மேலும் சிலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அதேவேளை, அதிகமான ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.ஆகவே, ‘ஊடக அடக்குமுறை என்றால் எனக்கு என்னவென்று தெரியும்’ என ஜனாதிபதி சொல்வதில் எமக்கு எவ்வித வியப்பும் இல்லை.
ஆனால், ஊடகங்களைக் கட்டுப்படுத்த, ஊடக சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்கு ஊடகங்களுக்கு எதிரான ஒரு அச்சுறுத்தலாக அவரது கருத்து இருக்கக்கூடாது.
அச்சுறுத்தல் இல்லையென்று ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் ஊடகங்களை அடக்கும் ஒரு செயற்பாடாகவே இதை நாங்கள் கணிக்க வேண்டி ஏற்படும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் கலந்துகொண்டு ஜனாதிபதியின் கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்திருந்தார்.