January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹட்டனில் பஸ் பள்ளத்தில் விழுந்ததில் மாணவர்கள் உட்பட 49 பேர் படுகாயம்

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  49 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த 49 பேரில் ஒருவர் பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


விபத்தில் காயமடைந்தவர்களில் 24 பேர் பாடசாலை மாணவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹட்டன் நோக்கி சென்ற குறித்த பஸ் இன்று காலை 7 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக முதல்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.