இலங்கையில் முதலாவது டோஸ் கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட நபர்களுக்கு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியின் பின்னர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் இலங்கையில் அவதானமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அன்றிலிருந்து தற்போது வரையில் மொத்தமாக எட்டு இலட்சத்து 64 ஆயிரத்து 20 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தடுப்பூசிகள் தொடர்பான பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவின் ‘ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’, சீனாவின் ‘செனோபார்ம்’, ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’, ஆகிய தடுப்பூசிகள் அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ஆறு இலட்சம் ‘செனோபார்ம்’ தடுப்பூசிகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு இலவசமாக கொடுக்கவுள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை படிப்படியாக ஏனைய மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன மேலும் தெரிவித்தார்.
வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்று
வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில்,யாழ்ப்பாணத்தில் 11 பேரும் மன்னாரில் மூன்று பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 290 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே, 14 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல்,மன்னாரில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.