July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொழும்பு துறைமுக மேற்கு முனைய ஒப்பந்தம்; ஒரு ‘தனியார் டீல்’ என எதிர்க்கட்சி விமர்சனம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் குறித்து இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமானது இரு அரசாங்கங்களுக்கு இடையில், விலைமனு கோரலின் மூலமாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இல்லையெனவும், இந்த ஒப்பந்தமானது தனியார் “டீல்” போன்று வெளிப்படுவதாகவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் அரசாங்கங்களுக்கிடையிலான அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தத்தை செய்திருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், முன்னைய அரசாங்கம் செய்திருந்த இந்த உடன்படிக்கை புவிசார் அரசியல் நகர்வை கருத்தில் கொண்டு முன்னெடுத்து செல்வதாக தற்போதைய அரசாங்கம் கூறினாலும், கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடுத்து மேற்கு முனையத்தை வழங்குவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வேலைத்திட்டம் குறித்த கடிதம் ஒன்றினையும் அதானி நிறுவனத்திற்கு அனுப்பியதாக அரசாங்கம் கூறியுள்ளது.ஆனால் இந்த ஒப்பந்தம் இரு அரசாங்கங்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலமாக தீர்மானிக்கப்பட்டதா என கேட்க விரும்புகிறேன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையில் இந்த உடன்படிக்கை அரசாங்கத்துடன் தொடர்புபட்டதல்ல என இந்திய அரசாங்கம் கூறியுள்ளமையும், ஜப்பான் இந்த விடயத்தில் அமைதி காப்பதும் கேள்வியை எழுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள இந்த மேற்கு முனைய அபிவிருத்தி குறித்த திறந்த விலை மனுக்கோரல் இடம்பெற்றதாகவோ, அல்லது முதலீட்டாளர்கள் அழைக்கப்பட்டதாகவோ தெரியவில்லை என கூறியுள்ள எரான் விக்ரமரத்ன, இந்த உடன்படிக்கை தனியார் ஒப்பந்தமாக செயற்படுவதாகவும், அவர்களுடன் தொடர்புபட்ட நட்பு வட்டாரத்திற்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் அது குறித்து ஆராய வேண்டியது அவசியம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.