January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனீவாவில் இலங்கைக்கு 3 தெரிவுகளே உள்ளன; தயான் ஜயதிலக

இலங்கை அரசாங்கத்திற்கு தற்போதைய நிலையில் மூன்று தெரிவுகளே உள்ளன.அதில் எதனை தெரிவு செய்யப்போகின்றது என்பதிலேயே எதிர்காலம் உள்ளது என ஐ.நா.வுக்கான முன்னாள் வதிவிடப்பிரதிநிதியும் எதிர்க்கட்சித்தலைவரின் சர்வதேச உறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் நிறைவேற்றப்படும் இலங்கை பற்றிய தீர்மானத்தினை நிராகரிக்கவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளமை தொடர்பில் ‘வீரகேசரி’ நாளிதழுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரேரணை நிறைவேற்றப்படுமாக இருந்தால் இலங்கை முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ளது. அந்த விடயங்களை மேற்கொண்டே ஆக வேண்டும் என்றும் கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கையினை சமர்ப்பிக்கும் காலம் ஆறு மாதங்களாக சுருக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் நல்லிணக்க, மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை காண்பிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மேலும் நெருக்கடிகளே அதிகரிக்கும்.

தற்போதை நிலையில் ஆட்சியாளர்களுக்கு மூன்று தெரிவுகளே காணப்படுகின்றன. முதலாவதாக முற்றாக ஐ.நா.தீர்மானத்தினை எதிர்த்து சர்வதேசத்தினைப் பகைத்துக்கொண்டு நடைபெறுபவைக்கு முகங்கொடுப்பதாகும்.

இரண்டாவதாக, மாகாண சபை முறைகளின் அதிகாரங்களை நீக்கி தேர்தலை நடத்திவிட்டு பின்னர் புதிய அரசியலமைப்பின் பெயரில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நீக்கிவிட்டு அதிகாரக்குவிப்பை செய்து இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தினை காலங்கடத்தி ஏமாற்றுவதோடு, அவ்வப்போது நெருக்கங்களையும் விரிசல்களையும் காண்பித்து சீரற்ற நிலைமைகளைப் பேணுதல்.

அதுமட்டுமன்றி இனக்குழுமங்களை மையப்படுத்திய நெருக்கடிகளை ஏற்படுத்துதல் மூன்றாவதாக, நிலைமைகளை புரிந்து ஐ.நா.தீர்மானத்திற்கு அமைவாக உள்நாட்டில் தேசிய ரீதியிலான வெளிப்படைத்தன்மையுடனான பொறிமுறையொன்றை ஏற்படுத்தி ஒவ்வொரு ஆறு மாத காலத்திற்கும் மீளாய்வு செய்யப்படும்போது முன்னேற்றகரமான நிலைமைகளை வெளிப்படுத்தல்.

இந்தத் தெரிவுகளுக்குள் ஒன்றை கையிலெடுக்கும் போது அதற்கான பிரதிபலன்களும் உடனுக்குடனே கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.