January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அரசியலமைப்பு நிபுணர் குழுவை அமைக்கும் போது எங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை”: சம்பந்தன்

புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்த்து வைக்கப்படவேண்டிய மிக முக்கியமான விடயமாக தமிழ்த் தேசியப் பிரச்சினை உள்ள போதும், அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர்கள் குழுவை அமைக்கும் போது, தங்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர்கள் குழுவுக்கு, சம்பந்தன் இது குறித்த கடிதமொன்றை மார்ச் 18 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளார்.

பெப்ரவரி 20 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நிபுணர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட சந்திப்பு மற்றும் அதன் பின்னர் பெப்ரவரி 24 ஆம் திகதி அந்தக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதம் மூலம் தம்மால் முன்வைக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பாக பதிலெதுவும் கிடைக்கவில்லை என்று சம்பந்தன் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிற்கான புதியதோர் அரசியலமைப்பில் தீர்த்து வைக்கப்படவேண்டிய மிக முக்கியமான விடயம் தமிழ்த் தேசியப் பிரச்சினையேயாகும் என்றபோதிலும், ஜனாதிபதி உங்களுடைய குழுவை நியமித்தபோது எங்களோடு கலந்தாலோசிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.

எனினும், உங்கள் குழு பொது மக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கோரியபோது, நாம் அந்நடைமுறையில் மிக ஆக்கபூர்வமாக ஈடுபட்டு எமது ஆலோசனைகளை அனுப்பி வைத்தோம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் உங்களது அழைப்பின்பேரில் நாம் உங்களைச் சந்தித்து, தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் கடந்த 33 ஆண்டுகளில் எட்டப்பட்ட கருத்தொருமைப்பாட்டு விடயங்களை இனங்காண்பதில் உங்களது குழுவோடு இணைந்து செயற்படுவதற்கான எமது விருப்பம் குறித்தும் மேலும் விரிவாக எடுத்துரைத்திருந்தோம் என்று சம்பந்தன் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே வாய்மூலமாகவும் எழுத்துமூலமாகவும் உங்களுக்கு அறிவிக்கப்பட்டவாறு, ஓர் ஐக்கிய, பிரிபடாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு என்ற வரையறைக்குள் தீர்வொன்றை காண்பதற்கு நாம் விரும்புகின்றோம். எனினும், அது இயன்றவரை அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்திற்கு இட்டுச் செல்லும் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையிலானதாக அமைந்திருக்க வேணடும் என்று சம்பந்தன் கடிதத்தின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இது, இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கதோர், அரசியலமைப்பை வகுக்கும் உன்னத பணியில் உங்களோடு ஒத்துழைப்பதற்கான எமது விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு நினைவூட்டுதலாகும் என்று இறுதியாக சம்பந்தன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், ஐநா செயலாளர், மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.