January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பாகிஸ்தான் ஆதரிக்கும்; பாகிஸ்தான் ஜனாதிபதி

பயங்கரவாதத்தை தோற்கடித்த உலகின் மிக வெற்றிகரமான நாடு இலங்கை என தெரிவித்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி கலாநிதி ஆரிப் அல்வி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் இலங்கையை தொடர்ந்து ஆதரிக்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தானின் 81 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் இராணுவப் பதவி நிலை பிரதானியான ஜெனரல் கமர் ஜாவிட் பாஜ்வாவின் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா பாகிஸ்தான் சென்றுள்ளார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் ஜனாதிபதி கலாநிதி ஆரிப் அல்வியை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மாளிகையில சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்போது ஜெனரல் ஷவேந்திர சில்வா,தனக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றியைத் தெரிவித்ததோடு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு தெரிவித்தார்.

இதனிடையே, பாகிஸ்தான் ஜனாதிபதி கலாநிதி ஆரிப் அல்வி, பயங்கரவாதத்தை தோற்கடித்த உலகின் மிக வெற்றிகரமான நாடு இலங்கை என்பதை தெரிவித்துக்கொண்டதோடு, பாகிஸ்தானும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மிகவும் திறம்பட செயற்பட்டுள்ளது என்றும் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் இலங்கையை ஆதரிக்கும் எனவும், இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நாங்கள் கடந்த காலத்தில் செயற்பட்டுள்ளதைப்போன்று எதிர்வரும் காலத்திலும் செயற்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் பாதுகாப்பு, சுற்றுலா, கடல் பாதுகாப்பு, கல்வி, சுற்றுச்சூழல், வணிகம் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் இரு நாடுகளும் நெருக்கமாக செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைக்கு இலங்கை மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை பாராட்டிய அவர், தடுப்பு நடவடிக்கைகளுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை,பாகிஸ்தானின் குடியரசு தின நிகழ்வில் கலந்துகொள்ளும் முதல் இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.