July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈஸ்டர் தாக்குதல்; சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றப் பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை’

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக மிக விரைவில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பிறகு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்;

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சட்டமா அதிபர் தனது மேற்பார்வையில் விசாரணைகளை நடத்தி வருகின்றார். அதேபோல், குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவர்களின் சில அறிக்கைகள் சட்டமா அதிபரின் கைக்கு சென்றுள்ளன. ஏற்கனவே குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனினும், மிக விரைவில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்வோம் என்று நம்புகிறோம். இதுதொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தொடர்ந்து சட்டமா அதிபர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பட்டார்.

இதற்கிடையில், ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் கறுப்பு ஞாயிறு போராட்டம் இன்றும் நடைபெறுகிறது.

கறுப்பு ஞாயிறு போராட்டம் தொடர்ந்து  முன்னெடுக்கப்படுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்.

மேலும், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணையை நடத்துவதற்கு, அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கடவுளின் தாயின் பரிந்துரைக்காக பிரார்த்தனை செய்ய இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இரவு 7.00 மணிக்கு சிறப்பு சேவையொன்று ராகமவில் உள்ள பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.

இது இவ்வாறிருக்க, ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக இன்னும் சில நாட்களில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு காரணமான சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.