July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இறுக்கமடையும் வீதிப் போக்குவரத்துச் சட்டம்!

வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் வீதிப் போக்குவரத்துச் சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக போக்குவரத்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை பசறை பகுதியில் நேற்று பஸ் ஒன்று 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் வரையிலானோர் காயமடைந்தனர்.

வீதியில் எதிரே வந்த டிப்பர் லொறியொன்றுக்கு இடம்கொடுக்கும் போதே பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ் மற்றும் லொறி சாரதிகளின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வீதி ஒழுங்கு விதிகளை மீறுவோர் தொடர்பான சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வீதிப் போக்குவரத்துச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடாகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும், மதுபோதையில் மற்றும் கவனயீனமான முறையில வாகனத்தைச் செலுத்துபவர்கள் சம்பந்தமாக இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.