July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையை ஐசிசி விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்துமாறு தென் ஆபிரிக்காவிடம் வேண்டுகோள்

ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் ‘இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும்’ என்ற விடயத்தை உள்ளடக்க வலியுறுத்துமாறு பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம், தென் ஆபிரிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த இயக்கம் தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரம்போசாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை மீதான தீர்மான வரைவைத் தயாரிக்கும் போது பிரிட்டன் தலைமையிலான நாடுகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்றும் மக்கள் பேரெழுச்சி இயக்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்மானத்தைக் கொண்டு வரும் நாடுகளின் வரைவுத் தீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க முன்னர் தமிழர் தரப்புகளால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு மேன்முறையீகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா வரைவு கொடூரமான குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை எதிர்பார்ப்புக்களையேனும் பூர்த்தி செய்யவில்லை என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக புரியப்பட்ட அநீதிகள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கடிதத்தில் பட்டியலிடப்பட்டு, தென் ஆபிரிக்க ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐநா வரைவில் புறக்கணிக்கப்பட்டுள்ள சர்வதேச குற்றவியல் விசாரணையை, அறிக்கையில் உள்ளடக்க தென் ஆபிரிக்கா வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.