இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்துக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், இவ்வாறு இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர்.
வெளியுறவு அமைச்சர் மற்றும் இந்தியத் தூதுவர் ஆகியோர் இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பாக கலந்துரையாடியதாக, வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை மீதான தீர்மானம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளிலும் கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது குறித்தும், மக்களுக்கு இந்தியத் தடுப்பூசிகளை வழங்குவது குறித்தும் நீண்ட கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.