October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை மீதான ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்’: சுமந்திரன் நம்பிக்கை

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் ஐநா தீர்மானத்துக்கு இந்தியா வாக்களிக்கும் என்று தாம் வெகுவாக நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தீர்மானம் மீதான வாக்கெடுப்பு காலம் நெருங்கியுள்ள நிலையில், இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பதும், வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதும் இந்தியாவின் தீர்மானமாக இருந்தாலும், தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அங்கீகரிக்க வேண்டும் என்று இந்தியா ஐநா பேரவையில் தெரிவித்துள்ளதால், தமது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியா கடந்த 2009, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டில் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இம்முறை இந்தியா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காது என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், ஐநா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு இலங்கை இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.