July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சைகை காட்டிய சம்பவம்: மே. ஜெனரல் பிரியங்கவை விடுதலை செய்தது பிரிட்டிஷ் நீதிமன்றம்

பிரிட்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி சைகை வெளிப்படுத்திய மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை, பிரிட்டிஷ் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டு இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தன்று லண்டன்; இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, மூத்த தூதரக அதிகாரி மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ, ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்தில் விரலை வைத்து சைகை காட்டியிருந்தார்.

குறித்த சம்பவத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் வழக்குத் தொடுத்திருந்த நிலையில், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றம் மேஜர் ஜெனரல் பிரியங்கவை குற்றவாளி என கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம், பிரிட்டிஷ் மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தது.

1961 ஆம் ஆண்டின் இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கைக்கு அமைவாக, மேஜர் ஜெனரல் பிரியங்கவுக்கு வழக்கு நடவடிக்கைகளில் இருந்து விடுபடும் இராஜதந்திர சிறப்புரிமை உள்ளதாக அவர் சார்பில் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வியன்னா உடன்படிக்கையின் நோக்கம் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் இராஜதந்திர அதிகாரிகளுக்கு வழக்கில் இருந்து விடுபடும் சிறப்புரிமை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதற்கமைய, மேஜர் ஜெனரல் பிரியங்க மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து, பிரிட்டிஷ் மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.

பிரியங்க பெர்ணான்டோவுக்கு ஏற்பட்டுள்ள வழக்கு செலவுத் தொகையை, அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தவர்கள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.