இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் தமிழ் நாளிதழில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் பிரசுரிக்கப்பட்டமைக்கு எதிராக காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த அந்த நாளிதழின் நிர்வாக இயக்குனரும் ஆசிரியர் பீட உறுப்பினரும் யாழ். நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது படத்தை பிரசுரித்ததன் மூலம் இனங்களுக்கு இடையே முரண்பாட்டை ஏற்படுத்தியதாகவும் நீதிமன்றத்தை அவமதித்ததாகவும் உதயன் நாளிதழின் நிர்வாக இயக்குனர் ஈ. சரவணபவன் மற்றும் ஆசிரியர் பீட உறுப்பினர் திலிப் அமுதன் ஆகியோர் மீது காவல்துறையினர் கடந்த டிசம்பர் 4 திகதி தாக்கல் செய்திருந்த அறிக்கையில் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த வழக்கில் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி. தவராசா மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர், நாட்டின் குற்றவியல் நடைமுறைக் கோவையின் ஏற்பாடுகளை சரிவர கடைப்பிடிக்காமல் குறித்த வழக்கை காவல்துறையினர் தொடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தனர்.
குறிப்பாக, இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் பிணை வழங்கமுடியாத குற்றச்சாட்டை சுமத்தும்போது, யாழ். பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ அவரது மேலதிகாரிக்கோ அல்லது அதிகாரமுள்ள நீதிமன்றத்துக்கோ அறிவித்திருக்க வேண்டும் என்றும்- இலங்கைத் தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் இவ்வாறான குற்றச்சாட்டைப் பதிவு செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் அலுவலகத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் சட்டத்தரணி கே.வி. தவராசா சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்தோடு உதயன் நாளிதழைப் போலவே, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் வேறு சில பத்திரிகைகளிலும் தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் சில ஊடகங்களிலும் குறித்த காலப்பகுதியில் பிரபாகரனின் படம் வெளியாகியிருந்ததாகவும், உதயன் நிர்வாக இயக்குனர் மீதான குற்றச்சாட்டு தனிப்பட்ட குரோதம் காரணமாக சுமத்தப்பட்டது என்றும் தவராசா வாதிட்டிருந்தார்.
அவ்வாறே, இரண்டாவது சந்தேகநபராக குறிப்பிடப்பட்டிருந்த பத்திரிகையின் ஆசிரியர் பீட உறுப்பினர் மீதான குற்றச்சாட்டுக்களும் குற்றவியல் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக பதிவுசெய்யப்பட்டிருக்கவில்லை என்று அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறித்த செய்தி பிரசுரமானபோது தமது கட்சிக்காரர் கடமையில் இருந்திருக்கவில்லை என்றும் அவர் மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சட்ட அடிப்படை அற்றது என்றும் சுமந்திரன் வாதிட்டுள்ளார்.
சட்டத்தரணிகள் இருவரும் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதவான், உதயன் நாளிதழின் நிர்வாக இயக்குனரையும் செய்தி ஆசிரியரையும் சந்தேகநபர்கள் என்று குறிப்பிடுவதிலிருந்து விடுவிப்பதாக அறிவித்தார்.
உதயன் பத்திரிகை மீதான குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்திருந்த யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ, இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்ற இரண்டு சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.