கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹராவை உலக மரபுரிமையாக அறிவிப்பதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோவின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆலோசனையை பாரிஸில் அமைந்துள்ள யுனெஸ்கோ அமைப்பின் தலைமையகத்திற்கு முன்வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு ‘அருவமான மரபுரிமை’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் யுனெஸ்கோவின் இலங்கை அலுவலகத்தின் பொதுச்செயலாளர் பேராசியர் புஞ்சி நிலமே மீகஸ்தென்ன கூறியுள்ளார்.
இதனிடையே, இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் அபய வாவி எனப்படும் வசப குளத்தை உலக மரபுரிமையாக அறிவிப்பதற்கு நீர்ப்பாசன அமைச்சு ஆலோசனையை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுனெஸ்கோவிடம் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களில் எல்லங்கா வாவி அமைப்பு மற்றும் ராஜகல தொல்பொருள் தளம் உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அடுத்த மாதம் 24 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள செயலமர்வில் தொல்பொருள் மற்றும் கலாசாரத் துறையைச் சேர்ந்த 24 பேராசிரியர்களுடன் கலந்தாலோசித்து இதற்கான திட்டம் தயாரிக்கப்படுமென பேராசிரியர் புஞ்சி நிலமே மீகஸ்தென்ன தெரிவித்துள்ளார்.