Photo: Facebook/ Vijayakala Maheswaran
விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்சைக்குரிய கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது சட்ட நடவடிக்கையெடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக சிஐடியினரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் முடிவடைந்ததை தொடர்ந்து, சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாகவும் ஆனால் இன்னும் அவரின் ஆலோசனை கிடைக்கப் பெறவில்லை என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
2018 ஜுன் 2 ஆம் திகதி, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்தொன்று தென்னிலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இவர் நாட்டின் அரசியலமைப்பை மீறி விடுதலைப் புலிகளை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவித்து சிங்கள ராவய அமைப்பினால் சிஐடியில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் விஜயகலா மகேஸ்வரனை ஒக்டோபர் 8 ஆம் திகதி கைது செய்தனர். அதன் பின்னர் அன்றைய தினமே நீதிமன்றத்தினால் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு மீண்டும் இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை என்று சிஐடியினர் அறிவித்த நிலையில், நீதவானால் சட்டமா அதிபருக்கு நினைவூட்டும் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டது.
இதேவேளை இந்த வழக்கை மீண்டும் செப்டம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அன்றைய தினத்தில் விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையொன்றை சமர்பிக்குமாறும் நீதவான் சிஐடியினருக்கு அறிவித்துள்ளார்.