இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள ஐநா தீர்மானம் பொறுப்புக்கூறல் முயற்சிகளில் உதவக்கூடியதாக இல்லை என்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஐநா தீர்மானம் கடந்த காலங்களில் இலங்கையின் மனித உரிமை விடயங்களின் முன்னேற்றங்களைப் புறக்கணிப்பதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானத்தை முன்வைத்துள்ள நாடுகள் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இந்த அரசாங்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து இலங்கையில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய உறுப்பு நாடான இலங்கைக்கு எதிராக பிரிட்டனின் நடவடிக்கைகளுக்கு அவரது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கை மீது ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கும் பிரிட்டன் தலைமையிலான நாடுகள், அது சரியானதா அல்லது தவறானதா என்பது குறித்து கவலைப்படவில்லை என்றும் தினேஷ் குணவர்தன குற்றம்சாட்டியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தில் தெற்கு நாடுகளுக்கு எதிராக வடக்கு நாடுகள் குழிபறிக்கும் செயலில் ஈடுபடுகின்றதாகவும் அவர் சாடியுள்ளார்.
மேலும், ஜெனிவாவில் ‘இலங்கை மீது இந்தியா எவ்வித அநியாயத்தையும் இழைக்காது’ என்று தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டில் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாகவும், காணாமல் போனவர்கள் மற்றும் இழப்பீட்டு அலுவலகங்களுக்கான கொடுப்பனவுகளை தொடர்ந்தும் வழங்கவுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.