
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் செல்லவுள்ளார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பின் பேரிலேயே பிரதமர் அங்கு செல்கின்றார்.
பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாகப் போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபுர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரதமரின் இந்தப் பயணம் அமையவுள்ளது.
கொரோனாத் தொற்று நோயைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு இணங்க, கடுமையான சுகாதார முன்னெச்சரிக்கைகளைத் தொடர்ந்து பங்களாதேஷுக்கான இராஜதந்திர பயணத்துக்கு இலங்கை சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
பங்கபந்து ஷெயிக் முஜிபுர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரதமர் மஹிந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
மஹிந்தவின் இந்தப் பயணத்தின்போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.