இலங்கையில் முஸ்லிம் மக்களின் தலைவர்கள் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிப்பதாக அரசாங்கம் கூறுவது அவர்களை தவறானவர்களாக சித்தரிப்பதற்காகவே என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கூறிய விடயங்களின் உள்ளர்த்தம் ‘இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு வேறு சட்டம் வேண்டும் என்பதல்ல’ என்று கூறியுள்ள ஹக்கீம், நாட்டின் குற்றவியல் சட்டங்களிலோ வேறு அடிப்படைச் சட்டங்களிலோ முஸ்லிம் தலைவர்கள் மாற்றங்களை கோரவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் தலைவர்கள் தவறான நிலைப்பாட்டில் உள்ளதாகவும் நாட்டை குழப்பும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் கூறி அரசாங்கம் தம்மை குற்றவாளிகளாக்க முயற்சிப்பதாகவும் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் வெறுப்புணர்வு பேச்சுக்களை வெளிப்படுத்தியதாகவும் கூறி கைது செய்யப்பட்டுள்ள அசாத் சாலி 3-மாத தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.