
அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த வடக்கு மாகாண காணி ஆவணங்கள் மீண்டும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளன.
வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களினதும் காணி தொடர்பான ஆவணங்கள் யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்த நிலையில், அவற்றில் யாழ். மாவட்டத்தை தவிர மற்றைய நான்கு மாவட்டங்களினதும் ஆவணங்கள் அண்மையில் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினாலேயே அவை அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில், இன்றைய தினம் அவை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்த ஆவணங்கள் இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் தி.விமலன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.