
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம் தொடர்பாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் விசாரணை நடத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மொஹமட் இப்ராஹிம் ஜேவிபியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டமை குறித்தே அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளன அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அமைச்சர் சரத் வீரசேகர கூறும் விடயங்கள் புஸ்வானமாக மாறிவிடுகின்றது என்று விமர்ச்சித்திருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து கூறும் போதே சரத் வீரசேகர இவ்வாறு கூறியுள்ளார்.
நான் கூறும் விடயங்கள் உண்மையா? பொய்யா? என்பதனை இன்னும் சிறிது காலத்தில் தெரிந்துகொள்ள முடியும் என்று இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளான மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்பாஸ் ஆகியோரின் தந்தையான மொஹமட் இப்ராஹிம் தாக்குதலுக்கு பணம் கொடுத்துள்ளதாகவும், இவருக்கு ஜேவிபியின் தேசியப் பட்டியலில் இடம் ஒதுக்கப்பட்டமை தொடர்பாக அனுரகுமாரவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.