January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் டக்ளஸை சந்திக்காதது ஏன்?; காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் விளக்கம்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தாம் ஒருபோதும் சந்திக்கப் போவதில்லை, அவரை சந்திக்கும் விருப்பமும் இல்லை என வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தான் வலிந்து அழைக்கவில்லை என்றும் அவர்கள் விரும்பினால் தம்மை வந்து சந்திக்கலாம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

இதையடுத்தே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியிலும் மகிந்த ராஜபக்‌ஷ அரசின் காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு இந்த அரசோ அதில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவோ எந்த தீர்வையும் பெற்றுத்தரவில்லை.

அத்தோடு உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சியினரும் காரணம்.

இந்நிலையில் நாம் அவரை எப்படி சந்திக்க முடியும்? அவ்வாறு சந்தித்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் தொடர்பில் அமைச்சரால் எங்களுக்கு என்ன நியாயத்தை பெற்றுத் தரமுடியும்” என்று கனகரஞ்சினி கூறியுள்ளார்.

இதேவேளை, “என்னை சந்திப்பதும் விடுவதும் அவர்களது விருப்பம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு உள்நோக்கத்துடன் செயல்படுகின்றன” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று தான் யோசிப்பதாக கூறியுள்ள அவர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்புகள் இந்த பிரச்சினையை தீராப் பிரச்சனையாக வைத்திருக்க விரும்புவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்புகளுக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கே அழைப்பு விடுத்துள்ளேன்” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.