ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 22 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து தீர்மானம் மீதான வாக்கெடுப்பு அன்றைய தினத்தில் அல்லது மறுநாள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரிட்டன் தலைமையிலான 6 நாடுகள் இணைந்து முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பில் திருத்தங்களை முன்வைப்பதற்கான கால அவகாசம் செவ்வாய்க்கிழமை வரையில் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு சுமார் 40 நாடுகள் இணை அனுசரணையாளர்களாக கையெழுத்திட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மேற்குலக நாடுகளாகும்.
இந்த விடயத்தில் இலங்கைக்கு தெற்காசிய நாடுகள் ஆதரவளிக்கலாம் என்பதுடன், பாகிஸ்தான் இலங்கையின் வெளிப்படையான ஆதரவாளராக இருந்து வருகிறது.
இந்நிலையில் அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை உள்ளிடக்கிய ‘குவாட்’ கூட்டணியினால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்குக்கு எதிரான குவாட் நாடுகளின் சுதந்திர, திறந்த இந்தோ – பசுபிக் கொள்கைக்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்குமாறு இலங்கை மீது அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.