மாகாண சபைத் தேர்தலானது புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து எதிர்வரும் 30 ஆம் திகதி சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்தும் முனைப்பில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் இதுகுறித்து பல்வேறு தரப்பினரும், கட்சிகளின் தலைவர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருக்கும் மாகாண சபைகளை செயல்படுத்துவதற்காக, புதிய அல்லது பழைய முறை என ஏதாவது ஒரு முறையில் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடாக காணப்படுகின்றது.
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறை தொடர்பாக அமைச்சரவை எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் தமது கட்சி உடன்படுவதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர கரியவாசம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாகாண சபை தேர்தலை பழைய முறையின்படி நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூறியுள்ளது.
ஆனால் புதிய முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டுமென்பதே தமது நிலைப்பாடாக இருக்கின்றது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.