நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாதிருக்கும் நிலையில், எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அதன் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
அரிசி, தேங்காய், பால் மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, மரக்கறி மற்றும் சமையல் எரிவாயு ஆகியன தொடர்பில் மக்களுக்கு நிவராணத்தை வழங்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான அழுத்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர், கொவிட் – 19 தொற்று நிலைமையின் போது உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் எரிவாயு நிறுவனங்களால் இலாபம் ஈட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போதைய நிலைமையில் அதன் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.