‘அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி ஐ.நா.விடம் இலங்கையைக் காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தையே தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் செய்து வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கையை நிறுத்துமாறு அவர்களிடம் மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
சர்வதேசத்திடம் நீதி கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் பேரணி முன்னெடுக்கப்பட்டது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நிறைவுக்கு வந்த பின்னர் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் நடைபெறும் காலங்களில் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் அரசுக்கு எதிராகவும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பெரும் எடுப்பில் போராட்டங்களை நடத்துவது வழமை. ஆனால், இம்முறை இந்தப் போராட்டங்கள் உச்சமடைந்துள்ளன.
அரசையும் பெரும்பான்மையினத்தவர்களாக இருக்கும் சிங்களவர்களையும் சீண்டிப் பார்க்கும் வகையிலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் புலம்பெயர் அமைப்புகளின் கோடிக்கணக்கான நிதிதான் உள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு வழங்கியுள்ள சுதந்திரத்தை வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் தவறான வழியில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
………