ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரியாஜ் பதியுதீன் 5 மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ரியாஜ் பதியுதீனிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று மாலை அவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து சஹரான் குழுவினரால் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த குற்றப் புலனாய்வு பிரிவினர், தாக்குதல் நடத்திய குழுவை சேர்ந்தவர்களுடன் தொடர்புகளை பேணியிருந்ததாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதினின் சகோதரரான ரியாஜ் பதியுதீனை கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி கைது செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.
விசாரணைகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்றைய தினத்தில் விடுதலையாகியுள்ளார்.
இதேவேளை ரியாஜ் பதியுதீனுடன் கைதுசெய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், மொஹமட் அமீன் மொஹமட் அஸ்மின் எனும் கோடீஸ்வர வர்த்தகர் மற்றும் சுங்க அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 6 பேர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.