November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளிக்க நடவடிக்கை”

Mujibur Rahman Official Facebook

ஈஸ்டர் தாக்குதலுடன் எனக்கு தொடர்புள்ளதாக கருத்து வெளியிட்ட விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஈஸ்டர் தாக்குதலுடன் அசாத் சாலி, றிஷாட் பதியுதீன் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகிய மூவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் தொடர்பில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிட்ட அறிக்கையில் எந்தவொரு விடயங்களும் குறிப்பிடப்படவில்லை என குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு என்னைப்பற்றி கருத்து வெளியிட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதலுடன் என்னை தொடர்புபடுத்தி அவர் கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவையாகும்.

உண்மையில் அவர் இது தொடர்பில் அறிந்திருந்தால் ஊடகங்களுக்கு தெரிவிப்பதை விடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவில் தெரிவித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திருக்க முடியும். எனினும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர் இதற்கு முரணான கருத்துக்களையே முன்வைத்திருந்தார்.

தற்போது என்னுடைய நற்பெயருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். எனவே அவருக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படாமைக்கான காரணம் முஸ்லிம் தலைவர்கள்தான் என்று அவர் தெரிவித்துள்ள கருத்தும் உண்மைக்கு புறம்பானதாகும். அவர் அன்றைய எதிர்க்கட்சியுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் காரணமாகவே அமைச்சு பதவியை வழங்காதிருக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதுவே உண்மையாகும். எனினும் அவர் இதனை வேறொரு பக்கம் திசை திருப்ப முயற்சிக்கிறார்.

விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடளிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். இவ்வாறான வெறுக்கத்தக்க கருத்துக்களை எவரும் முன்வைக்க முடியாது.

எனவே, அசாத் சாலி வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துதான் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றால், விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.