இலங்கையில் முதல் தடவையாகப் ‘பல்-அம்சங்கள்’ கொண்ட டிஜிட்டல் பஸ் தரிப்பிடம் ஒன்று பத்தரமுல்லையிலுள்ள ‘தியத உயன’ பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஆலோசனைக்கமைய இலங்கை இராணுவ மின்சார பொறியியல் இயந்திர படையணியின் (SLEME) இராணுவ வீரர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இணைந்து இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த பஸ் தரிப்பிடத்தை திறந்து வைத்துள்ளார்.
பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் இந்த “எம் ஸ்டொப்” பஸ் தரிப்பிடம் 20 x 8 அடி பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் கட்டமைப்புக்குள் ஏ.டி.எம் இயந்திரம், பயணிகளுக்கான ஆசனங்கள், சிறிய விற்பனை நிலையம், குளிரூட்டப்பட்ட இருக்கை பகுதி, சிசிடிவி கண்காணிப்பு தொகுதி, தானியங்கி கதவுகளுடன் கூடிய இரு நுழைவாயில்கள் என்பன அடங்குகின்றன.
அத்தோடு பஸ் தரிப்பிடத்தின் காட்சித்திரைகளில், நகர வரைபடம், விளம்பரங்கள், பஸ்களின் நேர அட்டவணைகள் ஆகிய டிஜிட்டல் அம்சங்களையும் இணைய வசதியையும் கொண்டுள்ளது.
இந்த குளிரூட்டப்பட்ட டிஜிட்டல் பஸ் தரிப்பிடம் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.