ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொலன்னவை பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்
மாவனெல்லை புத்தர் சிலை உடைப்புக்கும், வேறு சில செயற்பாடுகளுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அசாத் சாலி தொடர்புடையவர் என்ற விடயம் தெரியவந்துள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், ஷரிஆ சட்டம் மற்றும் நாட்டு சட்டம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்து அடிப்படைவாதத்தை தூண்டக் கூடியது மற்றும் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்க கூடியதாக இருந்தது என்றும் இதனால் அவர் கைது செய்யப்பட்டார் என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
எனவே, தடுப்பு காவலில் வைத்து அவரை விசாரிக்கும் போது இந்த உண்மைகள் வெளிவரும் எனவும், அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அசாத் சாலியை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.