November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழக தேர்தல் களத்தில் வெளியாகும் தமிழீழம் தொடர்பான கருத்துக்களால் இலங்கைக்கு கவலை இல்லை’

தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் தமிழீழம் தொடர்பாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை அதிகளவு கவனமெடுக்கும் தேவை இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாஜக கிளையொன்று திறக்கப்படவுள்ளதாகவும், ஈழ தேசம் உருவாக்கப்படவுள்ளதாகவும் தமிழக தேர்தல் களத்தில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர்களின் விவகாரம் பிரதான பிரசார அம்சமாக இருந்தாலும், தேர்தலைத் தொடர்ந்து அவர்கள் அதனை மறந்து விடுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய போராட்டங்களைத் தொடர்ந்து 30 வருட யுத்தம் முடிவடைந்துள்ளதாகவும், நாட்டில் பிரிவினைவாத செயற்பாடுகள் தோற்றம் பெற மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளுடன் தொடர்பைப் பேணி வருவதாகவும், அவர்கள் இரகசியமாகவும், சட்ட ரீதியாகவும் இலங்கைக்கு வந்து செல்வதாகவும் சுசில் பிரேமஜயந்த குற்றம்சாட்டியுள்ளார்.