November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புதிய வரி திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை’

புதிய வரி திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பிலான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய விவசாய பயிர்களுக்கு 14 சதவீதம், தகவல் தொழிநுட்பத்திற்கான வரி 14 சதவீதம் மற்றும் இரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதிக்கான 14 சதவீத வரி முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இரத்தினம் மற்றும் தங்க உள்ளூர் விற்பனைக்கான 28 சதவீத வரி 14 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத்திற்கான வரி 28 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மதுபானம், புகைப்பொருட்கள் என்பவற்றுக்கான 40 சதவீத வரியில் மாற்றமெதுவும் செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய வருமானச் சட்ட இலக்கத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த திருத்தங்களுக்கு சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று கூறிய அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சராக முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புதிய வரி திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான திருத்தங்களை வர்த்தமானியொன்றின் மூலம் வெளியிட்டு அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, புதிய வரி மாற்றங்கள் இலங்கையின் வரி முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டதாக இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.