மஸ்கெலியா, குயின்ஸ்லேன்ட் பிரிவில் உள்ள நெடுங்குடியிருப்பு தொகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 20 வீடுகள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளன.
குயின்ஸ்லேன்ட் பிரிவில் 20 வீடுகளைக்கொண்ட மூன்றாம் இலக்க நெடுங்குடியிருப்பு தொகுதியே இவ்வாறு தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக, இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரும், பொலிஸாரும் மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த தீ விபத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை, எனினும் வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்ககளை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய தோட்டப் பாடசாலையில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கான நிவாரண உதவிகளைத் தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும், மஸ்கெலியா பிரதேச சபையும் இணைந்து வழங்கியுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.