January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணிக்கு 25 ஆண்டுகளின் பின்னர் கிடைத்த பரிசு

இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு முன்னர் நடைபெற்ற ஐந்து ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களிலும் இலங்கை அணி நான்கு வெற்றிகளை மாத்திரம் பதிவுசெய்திருந்தது.

எனினும், 1996 ஆம் ஆண்டில் இதே போன்றதொரு நாளில் தான் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

ஐசிசி இன் 6 ஆவது ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி பாகிஸ்தானின் லாஹுர் கடாபி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 242 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 46.2 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில், இலங்கை அணி சார்பில், அரவிந்த டி சில்வா ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாக பெற்று இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருது வென்றார்.

இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்று 25 வருடங்கள் பூர்த்தியாகின்ற இன்றைய தினம், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் விசேட வைபவம் ஒன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

This slideshow requires JavaScript.

உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கங்கள் இலங்கை அணி வீரர்களுக்கு பிரதமரின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த பதக்கங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட் சபையிடம் கையளித்த போதிலும், அது உலகக் கிண்ணத்தில் விளையாடிய வீரர்களுக்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்படவில்லை.

இந்தப் பதக்கங்களை வழங்குவதை ஒரு விசேட நிகழ்வாக நடத்த இலங்கை கிரிக்கெட் சபை பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், அவ்வப்போது எழுந்த தவிர்க்க முடியாத காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது.

இதன்படி, சுமார் 25 வருடங்களின் பிறகு ஐசிசி இனால் வழங்கப்பட்ட குறித்த பதக்கங்கள் இலங்கை அணி வீரர்களுக்கு இன்று நடைபெற்ற வைபவத்தில் வைத்து கையளிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனவே, 1996 மார்ச் 17 என்பது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஒரு மறக்க முடியாத நினைவினை ஏற்படுத்திய நாள் ஆகும்.

உலக வரைபடத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு குட்டி தீவாக இருக்கும் இலங்கையின் நாமத்தை முழு உலகிற்கும் கொண்டு சென்ற நாள் இதுவென்று கூறினாலும் அது மிகையாகாது.