ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் தோல்வியடையச் செய்ததாக இலங்கையின் வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் பூகோள அரசியல் தொடர்பான இணையவழி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, வெளியுறவு செயலாளர் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சட்ட வரையறைகளுக்குள் நிறைவேற்ற முடியாத, நாட்டுக்கு எதிரான ஒரு தீர்மானத்துக்கு 2015 ஆம் ஆண்டு அனுசரணை தெரிவித்ததால், மக்கள் அதனை எதிர்த்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
30/1 தீர்மானத்துக்கு அங்கீகாரம் வழங்கியவர்களுக்கு இன்றைய பாராளுமன்றத்தில் ஒரு ஆசனம்கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், 2020 பொதுத் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் 2/3 பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இன- மதங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகள் இருக்கக் கூடாது என்றும் நாட்டுக்கு அரசியல் கொள்கையொன்று அவசியம் என்றும் வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் ஐநா தீர்மானத்தை ஆதரித்ததால், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களிடையே பிரிவினை ஏற்பட்டதாகவும் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.